கொலைவெறியில் மற்ற கைதிகள்? புதுவை சிறுமியை சிதைத்த அரக்கன்களுக்கு தனி அறை
கைதான 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் 57 வயது முதியவர் விவேகானந்தன் ஆகியோரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றால் பொதுமக்கள் தாக்குதல் நடத்துவார்கள் எனக் கருதிய போலீசார், இருவரையும் காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைக்கு நேரடியாக அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கொலை நடந்த இடத்தில் உள்ள தடயங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், கைதான குற்றவாளிகள் இருவரையும் விசாரணை கைதிகளுடன் சிறையில் அடைத்தால் விபரீதங்கள் ஏற்படக் கூடும் என கருதிய போலீசார், இருவரையும் சிறைக்குள் தனி அறையில் அடைக்க வேண்டுமெனக்கோரி சிறைத் துறைக்கு கடிதம் எழுதினர். இதனை சிறைத்துறை நிர்வாகம் ஏற்றுக்கொண்டதை அடுத்து இருவரும் தனியறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இந்த விவகாரத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள போலீசார், பாதுகாப்பு கருதி குற்றவாளிகள் இருவரிடமும் சிறைக்குள் வைத்தே விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.