மாநகராட்சி ஆணையருக்கே இந்த நிலையா? - அம்பலமான உண்மை
தாம்பரம் மாநகராட்சியில் கமிஷனராக பதவி வகித்து வந்தவர் ஐ.ஏ.எஸ் அழகுமீனா. சில நாள்கள் முன் பதவி உயர்வு பெற்ற இவர், தாம்பரம் மாநகராட்சியில் இருந்து கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், சேலையூர் காவல்நிலையத்தில் அழகு மீனா பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், சென்னை பல்லாவரம் பிள்ளையார் கோயில் தெருவில் இயங்கி வரும் பில்டர்ஸ் நிறுவனம் ஒன்று, தன்னுடைய கையெழுத்தை போலியாக இட்டு சேலையூர் 46 ஆவது வார்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியதாகவும், தொடர்ந்து தடையில்லா சான்றிதழும் தயாரித்து குடியிருப்புகளை விற்றதாகவும் குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தன்னுடைய கையெழுத்தை போலியாக இட்டு, கட்டடத்திற்கு மின் இனைப்பை பெற்ற நிறுவனம், குடியிருப்புக்கென தனியாக டிரான்ஸ்பார்மர்கள் நிறுவியிருக்கும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டிருக்கிறார். இவையனைத்தும், டிரான்பாஸ்பர்மர் பொருத்தப்பட்ட இடத்தின் அருகே வசித்து வந்த ஒருவர், சந்தேகமடைந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாநகராட்சியை தொடர்பு கொண்டபோது அம்பலமாகி இருக்கிறது. மாவட்ட ஆட்சியரின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்