ஆசிரியர்களை பஸ்ஸுக்கு உள்ளே கைது செய்த போலீஸ் - சென்னையில் பரபரப்பு
சென்னை டிபிஐ வளாகம் நோக்கி மீண்டும் வர முயன்ற இடைநிலை ஆசிரியர்களை, பேருந்திலேயே வைத்து போலீசார் கைது செய்தனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தீவிரமாக போராட்டம் நடத்தி வந்த, ஆசிரியர் சங்கத்தினரின் 2 அமைப்புகள் வாபஸ் பெற்ற நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் கைது செய்து விடுவிக்கப்பட்ட நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் மாநகர பேருந்துகள் மூலம் டிபிஐ நோக்கி சென்றனர். பேருந்தில் வைத்தே இடைநிலை ஆசிரியர்களை கைது செய்த போலீசார், ஆயிரம் விளக்கில் உள்ள சமுதாய நலக் கூடத்திற்கு அழைத்து சென்றனர். பின்பு ஆசிரியர்கள் அமர்ந்திருந்த பேருந்திலேயே, செங்கல்பட்டு பரனூர் டோல்கேட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து ஆசிரியர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.