நாடாளுமன்றத் தேர்தலில் பாமக கூட்டணியா? - பிப். 1ல் முக்கிய முடிவு எடுக்கப் போகும் பாமக
பிப்ரவரி ஒன்றாம் தேதி பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில், பிப்ரவரி ஒன்றாம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹாலில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் காலை 11.00 மணிக்கு பொதுக்குழு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து நிலை நிர்வாகிகளும், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தில், பிரதான கட்சிகள் தலைமையிலான அணியில் பங்கேற்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா?, வன்னியர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளிக்கும் கட்சியுடன் கூட்டணியா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.