தேர்வில் காப்பியடித்த ப்ளஸ் டூ மாணவன்.. கண்டித்தவர்களை கத்தியால் குத்திய பயங்கரம்..
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தேர்வில் காப்பியடித்ததை கண்டித்த மாணவனை சக மாணவர்களே கத்தியால் குத்தியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
கீழமுடிமன்னில் புனித வளன் என்ற மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்புக்கான மாதந்திர தேர்வு நடைபெற்றது. இதில், வணிகவியல் பிரிவை சேர்ந்த சதீஷ் என்ற மாணவர் காப்பி அடித்து தேர்வு எழுதியதை பார்த்த மாணவர்கள் நிஷாந்த், அமிர்தராஜ் ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மோதலில், சதீஷ், அமிர்தராஜ் மற்றும் நிஷாந்தை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதனால் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மற்றும் ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ் துணை வட்டாட்சியர் ஸ்டாலின் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.