`பெட்ரோல் குண்டு' விவகாரம் - போலீசையே மிரட்டிய கருக்கா வினோத் - FIR -ல் பதிந்த 5 பிரிவுகள்
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் வெளியாகி உள்ளன.
கிண்டி காவல் நிலைய தலைமை காவலர் மோகன் என்பவர், ஆளுநர் மாளிகை பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, பிற்பகல் 2.40 மணி அளவில் எதிர் புறம் உள்ள நடைபாதையில் இருந்து வந்த கருக்கா வினோத், இரண்டு பெட்ரோல் வெடிகுண்டை வீசினார். அதில் ஒரு குண்டு ஆளுநர் மாளிகை வாசல் முன்பும், மற்றொன்று வாசல் அருகேயும் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. உடனடியாக தானும், காவலர் சில்வானு உட்பட மூன்று பேர் சேர்ந்து, வினோத்தை பிடிக்க முயன்ற போது, தன்னை பிடிக்க வந்தால் பெட்ரோல் வெடி குண்டை வீசி விடுவதாக மிரட்டி இருக்கிறார் வினோத். இதன் பின்பு அவரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொலை மிரட்டல், அரசு அதிகாரியை வேலை செய்ய விடாமல் தடுத்தல், தீ வைத்தல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் கிண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.