கணவனை அண்ணனாக மாற்றிய மனைவி... ஆன்லைனில் பெண் தேடியவருக்கு ஸ்கெட்ச் - பெண் தேடுவோர்களே உஷார்
கணவனை அண்ணனாக மாற்றிய மனைவி
ஆன்லைனில் பெண் தேடியவருக்கு ஸ்கெட்ச்
ஆற்றுக்குள் ரகசிய சந்திப்பில் நடந்த பயங்கரம்
மறுமணம் செய்ய தனியார் செயலி மூலம் பெண் தேடிய நபரை கணவன் மனைவி சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஓதியாம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி தேவி. இவருடைய கணவனும், மூத்த மகனும் கொரோனாவால் கடந்த 2020 ம் ஆண்டு உயிரிழந்தனர். பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த அஞ்சலி தேவி, மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்து ஜோடி ஆப் என்ற செயலியில் தனது விவரங்களைப் பகிர்ந்து இருக்கிறார். இதனிடையே நெய்வேலியைச் சேர்ந்த விஸ்வநாத் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டு சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். சிறிது காலம் அவரை கவனித்து வந்த அவரது மனைவி விவகாரத்து பெற்று குழந்தைகளுடன் பிரிந்து சென்று இருக்கிறார். இதனால் தனியாக வசித்து வந்த விஸ்வநாத் அஞ்சலிதேவியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். போதிய வருமான இல்லாமல் தவித்த அவர்கள் சாப்பிட கூட வசதியின்றி வடலூரில் உள்ள வள்ளலார் தர்ம சபையில் சாப்பிட்டு வந்துள்ளனர். இதனிடையே ஜோடி ஆப் செயலியிலிருந்து தொடர்ந்து அஞ்சலி தேவிக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்துள்ளது. திருமண செயலியில் வசதியான வரன்கள் வந்தால், விஸ்வநாத்தை அண்ணன் என கூறி வாழலாம் என கூறி இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த மனைவியை பிரிந்த
பாலாஜி என்பவர் அஞ்சலி தேவியை 2-வதாக திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இதனைதொடர்ந்து, திட்டக்குடி வெள்ளாற்றுப் பகுதிக்கு வந்த பாலாஜியுடன் தனிமையில் அஞ்சலி பேசி கொண்டிருந்தார். அப்போது, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி மறைந்திருந்த விஸ்வநாத் பாலாஜியை வெட்டி கொலை செய்தார். பின்னர் அவரிடம் இருந்த போன், ஐந்து சவரன் தங்ககளை எடுத்துக்கொண்ட அவர்கள் சடலத்தை ஆற்று மணலில் புதைத்து விட்டு தப்பியுள்ளனர். கடந்த வாரம் ஆற்று மணலில் புதையுண்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது