"நோயாளிகள் கேட்டால் வழங்க வேண்டும்" - தனியார் மருத்துவமனைகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், தங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ குறிப்புகளைக் கேட்டால், மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை, சிகிசைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது உயிரிழந்தது. இதையடுத்து, 15 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு அவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,
பிரசவத்தின்போது பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பதற்கு மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு காரணங்கள் இருப்பதால் மருத்துவர்கள் மீது குறை கூற முடியாது என்றும் நீதிபதி கூறினார்.மேலும், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை குறிப்புகள் காணாமல் போய் விட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.மருத்துவ குறிப்புகளை அளிக்க மறுப்பது தவறான செயல் என்று கூறிய நீதிபதி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் கேட்கும் மருத்துவ குறிப்புகளை, மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், மனுதாரருக்கு மருத்துவ குறிப்பு வழங்காதது, பரமக்குடி அரசு மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி இல்லாதது ஆகிய காரணங்களுக்காக 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடை மனுதாரருக்கு சுகாதார துறையினர் எட்டு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.