ஊட்டிக்கு அடித்த எச்சரிக்கை.. தலைமைச் செயலகத்திலிருந்து பறந்த அவசர உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவால் இழப்பை குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது உள்ளிட்டவை குறித்து துறை அதிகாரிகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். இதில், நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டால், தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து, மீட்பு குழுக்களை பணியமர்த்த வேண்டும் எனவும், மீட்பு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதேபோல, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் எனவும், ஆடி பெருக்கு பண்டிகை போது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மக்கள் குளிக்க அனுமதிக்குமாறு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கேட்டுக்கொண்டர்.