தொடரும் மர்ம சாவு...ரகசியமாக புதைக்கப்படும் உடல்கள்?- அதிர்ந்த கலெக்டர்..நேரடியாக இறங்கிய அதிகாரிகள்

x

தொடரும் மர்ம சாவு... ரகசியமாக புதைக்கப்படும் உடல்கள்? - கலெக்டரையே அதிரவைத்த சம்பவம்... நேரடியாக இறங்கிய அதிகாரிகள்

உதகை அருகே செயல்பட்டு வரும் தனியார் காப்பகத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் உதகை ஆர்டிஓ மகராஜன் தலைமையிலான அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

முள்ளிகொரையில் இயங்கி வரும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்களை அடித்து துன்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. சிலர் மர்மமான முறையில் உயிரிழப்பதாகவும், அவர்களின் உடலை அதிகாரிகளுக்குத் தெரியாமல் அடக்கம் செய்து, அவர்களின் நகை, வீடு உள்ளிட்ட சொத்துக்களை அபகரித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீருவுக்கு புகார்கள் வந்தன.

இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, உதகை ஆர்டிஓ மகராஜன், தனி வட்டாட்சியர் சங்கீதா ராணி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அந்த இல்லத்திற்கு சென்று 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

காப்பக நிர்வாகிகளிடமும், அங்கு தங்கி இருப்பவர்களிடமும் விசாரணை நடத்தியதுடன், காப்பகத்தில் உயிரிழந்தவர்களின் சொத்து விவரங்களையும் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்டிஓ மகராஜன், விசாரணை முடிந்து ஓரிரு நாட்களில் ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்