ஆன்லைன் படிப்புகள் நடத்த தடை - அதிர்ச்சியில் மாணவர்கள்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலை நிலை கல்வி நிறுவனம் ஆன்லைன் படிப்புகள் நடத்த 2ஆண்டுகளுக்கு தடை விதித்து பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தில் 7 பாடப்பிரிவுகள் ஆன்லைன் மூலம் நடத்த பல்கலைக்கழக மானிய குழு அனுமதி வழங்கியது.
ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட படிப்புகளிலும் முறைகேடு நடப்பதாக புகார் இழந்தது. இதையடுத்து 2023ஆம் கல்வியாண்டில் இதில், 5 பாடப்பிரிவுகளாக குறைக்கப்பட்டது.
குற்றச்சாற்றுகள் தொடர்ந்ததால் ஆன்லைன் மூலம் அனைத்து பாடப்பிரிவுகளையும் நடத்த பல்கலைக்கழக மானிய குழு தடை விதித்தது. ஆனால், தடையை மீறிய பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் ஆன்லைன் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தியது.
இதுகுறித்து பல்வேறு புகார்கள் பல்கலைக்கழக மானிய குழுவுக்கு சென்றது. இதன் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த மேலும், 2 ஆண்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் படிப்புகளில் சேர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த உத்தரவால் ஏற்கனவே சேர்ந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொலைநிலை கல்வி நிறுவன இயக்குனர் , பதிவாளர் மற்றும் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.