நம்பர் போர்ட்டில் TN போடுவதற்கு பின்னால் விளையாடும் பல கோடிகள்..கில்லாடி கணக்கு காட்டிய ஆம்னி பஸ்கள்

x

வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள், இயக்குவதில் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு போக்குவரத்து துறை கறார் காட்டியதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..

தமிழகத்தில், பிரதான போக்குவரத்துகளில் தனியார் ஆம்னி பேருந்துகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.. நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து மாவட்டங்களிலும் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது..

தமிழகத்தில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்ததாலேயே, தனியார் ஆம்னி பேருந்துகளின் எகிறும் கட்டணங்கள், அவ்வப்போது பெரும் பிரச்சனையாக வெடிப்பதும் உண்டு..

தமிழகத்தில் படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளை பதிவு செய்வதற்கு 2021 க்கு முன்பு வரை அனுமதி வழங்கப்படவில்லை .

எனவே படுக்கை வசதியுடனான சொகுசு பேருந்துகளை வாங்கிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அவற்றை பிற மாநிலங்களில் பதிவு செய்து தமிழகத்தில் இயக்கினர்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் அறிமுகமான பிறகே , ஆம்னி பேருந்துகளுக்கும் அவ்வாறு படுக்கை வசதியுடன் தமிழகத்தில் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது .

இந்நிலையில், தமிழகத்திற்குள் TN எனத் தொடங்கும் பதிவெண்கள் கொண்ட பேருந்துகள் மட்டுமே தினசரி இயக்க சட்டப்படி அனுமதியுள்ளது.

பர்மிட் என்று சொல்லப்படும் பேருந்துகளுக்கான அனுமதி சீட்டைப்பெற பிற மாநிலங்களில் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும், ஆனால் தமிழகத்தில் மூன்றரை லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பர்மிட்டுக்காக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் நாகலாந்து , அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குறைந்த கட்டணத்தில் ஆம்னி பேருந்துகளை பதிவு செய்து தமிழகத்தில் இயக்கி வருகின்றனர். அதாவது வெளி மாநிலத்தில் permit போட்டுவிட்டு , தமிழ்நாட்டில் 3 மாதத்திற்கு ஒருமுறை சாலை வரி மட்டும் கட்டி பேருந்தை ஓட்டி வந்துள்ளனர்.

மேலும் பயணிகளுக்கு பல்வேறு முன்பதிவு செயலிகள் மூலம் மின்னணு முறையில் டிக்கெட்களை வழங்குவதன் மூலம் தனிநபர்களிடமிருந்து தனித்தனியாக கட்டணத்தை வசூலித்து வரி ஏய்ப்பில் ஈடுபடுவதும் அரசுக்கு தெரியவந்துள்ளது .

இதனால் தமிழக போக்குவரத்து துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதால், அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்று தமிழகத்தில் இயங்கும் வெளி மாநில பேருந்துகள், தமிழகத்தில் மறுபதிவு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியது.

மறு பதிவு செய்ய, தமிழக போக்குவரத்து துறை சார்பில் பலமுறை கால அவகாசமும் வழங்கப்பட்டது.இருப்பினும் இதுவரை 547 பேருந்துகள் மறுபதிவு செய்யப்படாமல் இயங்கி வருகின்றன.

குறிப்பாக, குறைவான பேருந்துகளை மட்டும் வைத்து ஆம்னி பேருந்து தொழிலில் ஈடுபட்டு வரும் சிறிய முதலாளிகள் தமிழக பதிவெண்ணுக்கு மாற தயக்கம் காட்டி வருகின்றனர்.

காரணம், தமிழக பதிவெண்ணுக்கு மாறினால் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை 5 லட்சம் வரை செலவு செய்து permit போடவேண்டும் என்பதால் இந்த தயக்கம் நிலவுவதாக தெரிகிறது.

இருப்பினும், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜூன் 14ம் தேதி முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தடை செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டது..

இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பதறிப்போன நிலையில், தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவு செய்திருந்த பயணிகளின் நிலையும் கேள்விக்குறியானது.

இதைத்தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கக்கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், திங்கட்கிழமை வரை அரசு தரப்பில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்பதிவு செய்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் திங்கட்கிழமைக்கு பிறகு முன்பதிவு செய்துள்ள பயணிகள் குழப்பத்திலேயே உள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்