உயிருக்கு போராடிய மூதாட்டி-1 கி.மீ.க்கு ஆம்புலன்ஸாக மாறிய நாற்காலி-தோளில் ஆக்சிஜென் சிலிண்டர்..
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சாலை வசதி இல்லாததால், திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை நாற்காலியில் அமர வைத்து, ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கிச் சென்ற அவலம் அரங்கேறியது.
கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஹாலன்நகர் பகுதியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு போதிய சாலை வசதி இல்லாததால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மலை ரயில் பாதை வழியாகவும், வனப்பகுதி வழியாகவும் நடந்து நகர்ப்பகுதிக்கு செல்ல வேண்டியிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், அண்மையில் திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட தேவி என்ற மூதாட்டியை, அப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்து, ஆக்ஸிஜன் சிலிண்டரை தனியாக இருவர் தோளில் தூக்கிக் கொண்டு பிரதான சாலைக்கு சென்றனர். பின்னர் உதகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூதாட்டி சேர்க்கப்பட்டார்.