"ரூ.7க்கே வழியில்ல நான் 7,000 கோடி பிஸ்னஸ்மேனாம்..?" - முட்டை வியாபாரியை அலற வைத்த அதிகாரிகள்
ஓசூரில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு பதிவு செய்ய சென்ற முட்டை வியாபாரியை, 6 ஆயிரம் கோடி வர்த்தகம் செய்யும் உங்களுக்கு எதுக்கு ஆயிரம் ரூபாய் எனக் கூறி அதிகாரிகள் கிறங்கடித்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் ராஜா நடராஜன். உழவர் சந்தையில் முட்டை வியாபரம் செய்து வரும் இவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை, வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. அதில், சென்னை எக்மோரில் உள்ள தனியார் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஒன்றுக்கு ராஜா நடராஜன் உரிமையாளர் எனவும், கடந்த ஆண்டு மட்டுமே சுமார் 6 ஆயிரத்து 902 கோடி ரூபாய் பண வர்த்தகம் செய்த நடராஜன், சுமார் ஆயிரத்து ஐநூறு கோடிக்கு மேல் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதத்தை கண்டு கொள்ளாமல் விட்ட நடராஜன், சில நாட்கள் கழித்து தனது மனைவிக்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை விண்ணப்பிக்க சென்றிருக்கிறார். அப்போதும், இதையே காரணம் காட்டி நடராஜனின் விண்ணப்ப படிவத்தை அதிகாரிகள் நிராகரித்தது அவரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. 7 ரூபாய்க்காக முட்டையை விற்று அல்லல்படும் நான், 7 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்வதாக அதிகாரிகள் கூறுவதாக குமுறிய நடராஜன், இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடுக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.