தமிழகத்திற்கு ரூ.5,000 கோடி நிதி வழங்க தயார்! - அமைச்சர் நிதின் கட்கரி
மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. ராஜேஷ்குமார், 2023-2024 ஆண்டுக்கான திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு சாலை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 657.53 கோடி ரூபாய் போதுமானது இல்லை என்றார். தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட தொகையாக சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை நடப்பு நிதி ஆண்டில் எந்த குறையும், காலதாமதமும் இல்லாமல் மத்திய அரசு ஒதுக்க கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி வழங்குவதில் நாங்கள் எந்தவித வரையறையும் வைத்திருக்கவில்லை என்றார். 2 ஆயிரம் கோடி அல்ல 5 ஆயிரம் கோடி ரூபாயைகூட ஒதுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நிதின் கட்கரி கூறினார். இதுகுறித்து பல்வேறு முடிவுகளையும் மேற்கொண்டு இருப்பதாக குறிப்பிட்ட கட்கரி, நீங்கள் பரிந்துரைகளையும், நிலம் கையகப்படுத்துதலையும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.