தேயிலை தோட்ட ஓனருக்கு ஆன்லைனில் வந்த அதிர்ச்சி தகவல்
உதகை அருகே ஒரு ஏக்கர் தேயிலை தோட்டத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக நில உரிமையாளர், நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இனமக்களின் நிலங்கள் கூட்டுப் பட்டாவாக இருக்கும் நிலையில், குடும்பத்தினரே ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, நிலத்தை உட்பிரிவு செய்யாமல் விற்பதற்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில், பொரோரை கிராமத்தை சேர்ந்த நஞ்சன் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் தேயிலை தோட்டத்தை சுத்தம் செய்த சிலர், அந்த இடத்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹர விஷ்வநாதன் என்பவர் வாங்கி இருப்பதாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நஞ்சன் குடும்பத்தினர் இணையவழியில் சரிபார்த்தபோது, அந்த நிலத்தை கெக்கட்டி கிராமத்தைச் சார்ந்த சிவலிங்கம், மகேஷ் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து, துறையூரைச் சேர்ந்த சதீஷ் குமாருக்கு விற்றது தெரியவந்தது. பின்னர் சதீஷ் குமார், ஹரிஹர விஸ்வநாதனுக்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து, நஞ்சனும் கிராம முக்கியஸ்தர்களும், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாவை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதையடுத்து, இந்த மோசடி குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு வருவாய்த் துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.