வயநாடு சாலையில் அடுத்த அதிர்ச்சி...மக்கள் கையில் எடுத்த ஆயுதம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்த நிலையில், அப்பகுதி மக்கள் கடை அடைப்பு மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட செப்பந்தோடு கிராமத்தில், காட்டுயானை தாக்கி மொய்தீன் என்பவர் உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அதிக சப்தம் எழுப்பி யானையை அங்கிருந்து விரட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த செப்பந்தோடு கிராமமக்கள், சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என அவர்கள் கூறியுள்ளனர். கிராமமக்களுக்கு ஆதரவாக வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வயநாடு செல்லும் பிரதான சாலையில் மறியல் நடைபெறுவதால் இரு மாநில போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.