ராமலிங்கம் கொலை வழக்கு... சல்லடை போடும் NIA... சிக்கிய முக்கிய ஆவணங்கள்- தொற்றிய பரபரப்பு
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள கம்பூரைச் சேர்ந்த நவாசுதீன் என்பவரது வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
முத்துப்பேட்டையில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ராஜ் முகம்மது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இவரிடம் இருந்து செல்போன், லேப்டாப், மெமரி கார்டு, புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் முகமது ரஃபீக் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், செல்போன் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வடகரையைச் சேர்ந்த நவாஸ் கான் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது. இதில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது. தேரிழந்தூரைச் சேர்ந்த முகமது பைசல் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது.