நெய்வேலி மாசுபாடு - விரைவில் விரிவான அறிக்கை தாக்கல்
நெய்வேலி மாசுபாடு தொடர்பாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளதாக மாநில மாசுகட்டுப்பாடு வாரியம் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மின்சாரத்தின் இருண்ட முகம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டது. இது குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீர் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்குட்படுத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். நீர் மற்றும் மண் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும், அதன் அறிக்கை வந்தவுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.