புகழ்பெற்ற உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் திடீர் அதிர்ச்சி
நெல்லை மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 2 அர்ச்சகர்கள் மட்டுமே பூஜை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் கோவில் நிர்வாகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உவரியில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான சுயம்புலிங்க சுவாமி கோயிலில், பரம்பரை அக்தாராக ராதாகிருஷ்ணன் என்பவர் உள்ளார். கடந்த ஆண்டு இந்த கோயிலில் 2 அர்ச்சகர்களை தவிர்த்து மற்ற அர்ச்சகர்களை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இரு அர்ச்சகர்களை தவிர்த்து மற்றவர்கள் கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திருக்கோவில் முன்பாக திரண்டு கோவில் நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் விரக்தியில் இருந்த அர்ச்சகர் ஒருவர், கோவிலில் உள்ள எண்ணெய்யை தலையில் ஊற்றி அசம்பாவிதத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை சக அர்ச்சகர்கள் சமாதானப்படுத்தினர். சம்பவம் அறிந்து வந்த வள்ளியூர் டிஎஸ்பி தலைமையிலான போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.