பள்ளியில் காணாமல் போன பணம்.. விசாரணை பெயரில் மாணவனை தாக்கிய ஆசிரியர்?
நெல்லையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், தன்னுடைய பணம் மாயமானது குறித்து கேட்டு, 8 ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரிந்து வரும் காயத்ரி தேவி என்ற ஆசிரியரின் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் பணம் மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதையறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில், விவகாரம் பூதாகரமானது. தகவலறிந்து வந்த போலீசார், பள்ளி மாணவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது, 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை பணம் மாயமானது குறித்து கேட்டு ஆசிரியர் தாக்கியது தெரியவந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ஆசிரியரிடம் இருந்து பணத்தை திருடி, மாணவர்கள் வளர்ப்பு புறா மற்றும் புகையிலை பொருள்கள் ஆகியவற்றை வாங்கியதாகவும் சொல்லப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.