"குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொறுப்பான அதிகாரிகள்" - புதிய பகீர் கிளப்பிய பல்வீர் சிங் தரப்பு
நெல்லையில், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில், ஏஎஸ்பி பல்வீர் சிங் உட்பட 15 பேருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாசமுத்திரத்தில், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியதாக எழுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்ற நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது வெவ்வேறு புகார்களில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தலா 250 பக்கங்களுக்கு மேலாக உள்ள இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் மகாராஜன், கட்டிங் பிளேயர் உள்ளிட்ட பொருட்களை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். அப்போது வாதிட்ட சிபிசிஐடி போலீசார் தரப்பு, ரத்தக்கரை படிந்த லத்தி மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தடயங்களை மறைத்ததாக வழக்கில் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாகவும்ம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, பல்வீர் சிங் உட்பட 15 பேருக்கும் ஜாமின் நீதிபதி உத்தரவிட்டார்.