"10 நாளா வாசல பாத்து நின்றேனே... எப்படியாவது என் சாமி வந்திடுவார்னு" - தமிழகத்தையே கலங்கடித்த பெண்ணின் கதறல் - நேரில் பார்த்து கண்கலங்கிய கலெக்டர்
கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கிய நாமக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் உயிரிழந்தது DNA பரிசோதனையில் உறுதியாகியுள்ளது... சில உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், இதன் பின்னணியில் என்ன நடந்தது?...
லாரி ஓட்டச் சென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியான கணவரின் உடலைக் கூட முழுமையாக பெற முடியாத ஆற்றாமை தான் இந்தக் கதறல்... எப்பேற்பட்ட பேரழிவானாலும் தன்னைக் காக்க தன் கணவர் எப்படியும் வந்து விடுவார் என்று நம்பியிருந்த ஒரு பாவப்பட்ட மனைவியின் ஏமாற்றம் தான் இந்த அழுகை...ஐயோ இனி என் சாமி என்ன பாக்க வரமாட்டாரே...என்ற இந்த அபலைப் பெண்ணின் அழுகை...தமிழகத்தையே கலங்கச் செய்துள்ளது...
கர்நாடக மாநிலம் ஹிரூரு...ஜூலை 16...பெய்த பேய் மழையால் திடீர் நிலச்சரிவு...கங்கவள்ளி ஆற்றில் காட்டாற்று வெள்ளம்...கதிகலங்கிப் போனது கர்நாடகா...
கெட்ட நேரம் பாருங்கள்...சரியாக அதே பாதையில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் எல்பிஜி டேங்கா் லாரிகளை ஓட்டிச் சென்றுள்ளனர்...
மங்களூரில் எரிவாயு நிரப்பிக் கொண்டு கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்த டேங்கா் லாரிகள் நிலச்சரிவிலும்... காட்டாற்று வெள்ளத்திலும் அடித்துச் செல்லப்பட்டன...
நாமக்கல் தாத்தையங்கார் பட்டியைச் சேர்ந்த சின்னண்ணன்... கரையாம்புதூரைச் சேர்ந்த சரவணன்...தருமபுரியைச் சேர்ந்த முருகன் ஆகிய மூவரும் தான் இந்த மூர்க்கமான பேரழிவில் சிக்கியது...
பரிதாபமாய் பலியான சின்னண்ணன், முருகன் உடல்கள் கூட கிடைத்து விட்டன...
ஆனால் ஓட்டுநர் சரவணன் மட்டும் கிடைக்கவில்லை...
கண்டிப்பாக இறந்திருக்க மாட்டார் என்றுதான் நம்பிக்கையுடன் அவரது குடும்பத்தினர் காத்துக் கிடந்தனர்...
வேண்டாத தெய்வமில்லை... வாசலில் ஏதேனும் வண்டி வந்து நின்றால் கூட அது தன் கணவராகத் தான் இருக்கும் என குழந்தையைப் போல் ஓடி ஓடிச் சென்று பார்த்துக் கொண்டிருந்தார் அவரது மனைவி சத்யா...
இந்த சூழலில் தான் 10 நாள்களுக்குப் பிறகு விபத்து நடந்த பகுதியில் யாரோ ஒருவரின் இடுப்புக்கு கீழே உள்ள சில பாகங்கள் மட்டும் கிடைத்துள்ளன...
அவை சரவணனின் பாகங்களாக இருக்கக் கூடும் என்பதால் அவரது தாயாரை கடந்த 23ம் தேதி உத்தர கன்னட மாவட்டத்திற்கு அழைத்துச் சென்று டி.என்.ஏ பரிசோதனை செய்துள்ளனர்...
இறுதி நிமிடம் வரை நம்பிக்கையுடன் இருந்த சத்யாவின் நம்பிக்கையில் இடி விழுந்ததைப் போல் இருந்தது வந்த செய்தி...
ஆம்...டி.என்.ஏ பரிசோதனை உறுதி செய்து விட்டது கிடைத்த பாகங்கள் சரவணனுடையது என்று...
உலகமே அழிந்து போனதைப் போல் உருக்குலைந்து போனார் சத்யா...
நாமக்கல் ஆட்சியர் உமா சரவணனின் வீட்டிற்கு நேரில் ஆறுதல் தெரிவிக்க சென்ற போது வாசலில் நின்று தலையில் அடித்துக் கொண்டு கதறியழுத சத்யாவைக் காண்கையில் கண்கள் கலங்கின...
மகனைப் பறிகொடுத்து விட்டு அழக் கூட தெம்பின்றி தவித்த சரவணனின் தாயைப் பார்க்கையில் பரிதாபமாய் உள்ளது...
சரவணின் மீதமுள்ள பாகங்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்... கிடைத்த உடல் பாகங்களைப் பெற அவரது குடும்பத்தார் கர்நாடகா சென்றுள்ளனர்...
சரவணின் குடும்பத்தினருக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக ஆட்சியர் உமா உறுதியளித்தார்...
குடும்ப வறுமைக்காக லாரி ஓட்டச் சென்ற தன் கணவரை துண்டு துண்டாக மூட்டை கட்டி கொண்டு வருவார்கள் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் சத்யா...
இந்தப் பெருந்துயரில் இருந்து சரவணின் குடும்பத்தார் எப்படி மீளப் போகின்றனர் என நினைக்கும்போதே பரிதாபமாக உள்ளது...