தந்தி டிவியின் தாக்கம்...மகிழ்ச்சியின் உச்சத்தில் ஒட்டுமொத்த கிராமம்
தந்தி டிவி செய்தி எதிரொலியாக கிராமத்திற்கு புதிய பேருந்து வழித்தடம் அமைக்கப் பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாமக்கல் திருச்செங்கோடு அடுத்துள்ள குருக்கலாம் பாளையத்திற்கு பேருந்துகள் இல்லாததால் 6 கிலோமீட்டர் தூரம் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை குறித்து தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது...
தங்களது பகுதிக்கு புதிய பேருந்து வழித்தடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தியது குறித்தும் நாம் பகிர்ந்திருந்தோம். இதனை அடுத்து வெற்றிகரமாக இன்று அந்த பகுதிக்கு புதிய பேருந்து வழித்தடம் துவக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த பேருந்து குருக்கலாம்பாளையம் முதல் காளிப்பட்டி வரை செல்ல உள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் கலந்து கொண்டு பேருந்துக்கு பூஜை செய்து துவக்கி வைத்தனர். அப்போது பள்ளி மாணவ மாணவிகளுடன் மாதேஸ்வரன், உமா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பயணம் செய்தனர். அவர்கள் தங்களுடன் உரையாடி கொண்டே பயணம் செய்ததால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.