தந்தை தூங்கியதும் தெரியாமல் போய் நள்ளிரவில் வேனை ஓட்டி பார்த்த மகன்..அதுவே கடைசி இரவாக மாறிய சோகம்

x

தந்தை தூங்கியதும் தெரியாமல் போய்

நள்ளிரவில் வேனை ஓட்டி பார்த்த மகன்

அதுவே கடைசி இரவாக மாறிய சோகம்

அடுத்த நொடியில் காத்திருந்த எமன்...

அறியாமல் ஜாலியாக சென்ற நண்பர்கள்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே, ஆம்னிவேன் ஓட்டி பழகும் போது, ஏற்பட்ட விபத்தில் 2 சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அடுத்த பெரியமருதூர் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 14 வயதான சுதர்சனம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகனான 17வயதான லோகேஷும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

இதில் லோகேஷின் தந்தை ஆம்னி வேன் வைத்துள்ள நிலையில், லோகேஷ் மற்றும் சுதர்சனத்திற்கு கார் ஓட்டி பழகுவதில் ஆர்வம் இருந்ததாக தெரிகிறது.

இதனால் தனது தந்தையின் ஆம்னி வேனை வைத்து ஓட்டி பழகலாமே...என லோகேஷ் எண்ண, அவருடன் சுதர்சனமும் கைக்கோர்த்துள்ளார்.

திங்களன்று இரவு 11 மணிக்கு பெற்றோருக்கு தெரியாமல், இருவரும் ஆம்னி வேனை எடுத்துக்கொண்டு பரமத்தி சாலை வழியே சென்றுள்ளனர்.

இவ்வேளையில், பரமத்தியில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் சாலையில், டொயோட்டோ பார்ச்சூனர் காரை ஓட்டியவாறு விக்னேஷ் என்ற நபர் வந்துள்ளார்.

அப்போது, 14 வயதான சுதர்சனம் காரை ஓட்டத் தெரியாமல் ஓட்டி வர, கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த விக்னேஷின் பார்ச்சூனர் கார் மீது ஆம்னி வேன் மோதியது..

மோதிய வேகத்தில் ஆம்னி வேன் சுக்குநூறாக நொறுங்க, ஆம்னி வேனுக்குள் சுதர்சனமும், லோகேஷும் சிக்கிக் கொண்டு உயிருக்காக போராடினர்.

ஆனால் அப்பளம் போல் நொறுங்கி கிடந்த ஆம்னி வேனில் இருந்து மீள முடியாததால், சம்பவ இடத்திலேயே சுதர்சனம் மற்றும் லோகேஷ் உடல்நசுங்கி துடிதுடிக்க உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்து நடந்த பகுதியில், கார் பாகங்கள் சிதறிக்கிடப்பதை கண்டு மனம் பதைபதைத்து போயினர்..

பின்னர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த இரு சிறுவர்களின் உடலையும் போராடி மீட்டனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவர்களுக்கு நேர்ந்த இந்த துயரம் அப்பகுதி மக்களை கடும் துயரில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது என்பது பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களின் புலம்பலாக உள்ளது.

உரிய வயதை எட்டுவதற்கு முன்பாக இதுபோன்ற வாகனங்களை பிள்ளைகளின் கையில் கொடுக்க கூடாது என்பதும் இந்த சம்பவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்