மிடாஸ் மதுபான ஆலையின் வங்கிக்கணக்கை முடக்கிய வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

x

மிடாஸ் மதுபான ஆலையின் வங்கிக்கணக்கை முடக்கிய தமிழ்நாடு அரசின் உத்தரவை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் மிடாஸ் நிறுவனம், இந்தாண்டிற்கான விற்பனை வரியை முறையாக செலுத்தாததாக கூறி அந்நிறுவனத்தின் நிலத்தையும், வங்கிக்கணக்கையும் தமிழக அரசு முடக்கியது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அந்நிறுவனத்தின் இயக்குனர் கே.கார்த்திகேயன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்தாண்டுக்கான விற்பனை வரியை செலுத்த கால தாமதமானதாகவும், ஏப்ரல் மாதத்திற்கான விற்பனை வரி 15.68 கோடி ரூபாயை செலுத்தியும் முடக்கத்தை கைவிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 15 நாட்களில் மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான பாக்கியை செலுத்த உறுதியளித்து கடிதம் எழுதியதாகவும், அரசு தரப்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். இதனை ஏற்ற நீதிபதி, மிடாஸ் நிறுவன வங்கிக்கணக்கை முடக்கிய தமிழக அரசின் உத்தரவை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்