சூறையாடப்பட்ட தனியார் மருத்துவமனையின் மருத்துவ முகாம் - வேலூரில் பரபரப்பு
வேலூர் ஒடுகத்தூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பாக, தனியார் மருத்துவ மனையின் மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த குமார் என்பவர், இலவச சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். மருத்துவ மனையின் தவறான சிகிச்சையே குமாரின் இறப்புக்கு காரணம் என, உறவினர்கள் அப்போது குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்தநிலையில், அதே தனியார் மருத்துவ மனையின் மருத்துவ முகாம், கீழ்கொத்தூரில் நடைபெற்றுள்ளது. இதனையறிந்த குமாரின் மகனும் உறவினர்களும் அங்கு சென்று, குமாரின் இறப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது உரிய பதில் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், முகாமை சூறையாடினர். முகாமின் பொறுப்பாளரான ஜெயராஜையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்த போலீசார், அனைவரையும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் புகாரளிக்காததால், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.