"பிரசவ காலத்தில் கணவருக்கும் லீவ்.." - ஐகோர்ட் மதுரைக்கிளை சொன்ன கருத்து
மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கும் விடுப்பு வழங்க தனி சட்டம் உருவாக்குவது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் காவல் ஆய்வாளர் சரவணன் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தனது மனைவியின் பிரசவத்திற்காக மே 1 முதல் 30 வரை விடுமுறை வழங்கப்பட்டதாகவும், ஆனால், 31ஆம் தேதி குழந்தை பிறந்ததால் பணிக்கு திரும்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியும், ஓடி விட்டதாக கூறி விளக்கம் கேட்டு அழைப்பாணை அனுப்பியதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கௌரி, மனைவியின் மகப்பேறு காலத்தில் கணவன் உடன் இருப்பது மிக அவசியம் என்றார். பல்வேறு நாடுகளில் மகப்பேறு காலத்தில் தாய் தந்தை இருவருக்கும் விடுப்பு வழங்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி, கணவர்களுக்கு விடுப்பு வழங்க தனி சட்டம் உருவாக்குவது அவசியம் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில், பொறுப்புள்ள கணவராக காவல் ஆய்வாளர் செயல்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, அழைப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.