வீட்டு பிரச்சனை தீர மந்திரம்.. மொத்த தங்கமும் மந்திரவாதி கையில் "உள்ளங்கை மடக்கி எடுத்தாரு ஓட்டம்.."
சேலத்தில், பரிகாரம் செய்வதாகக் கூறி, கூலி வேலை செய்யும் தம்பதியிடம் இருந்து தங்க நகையை திருடிச் சென்ற சம்பவத்தில், தலைமறைவாக இருந்த போலி மாந்தீரிகவாதி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே தம்மநாயக்கன்பட்டி தீரனூரை சேர்ந்த பன்னீர்செல்வம் - தனம் தம்பதியின் வீட்டிற்கு வந்த மாந்தீரிகவாதி ஒருவர், பிரச்சினையை தீர்த்து வைப்பதாகக் கூறியுள்ளார். அப்போது, பரிகார பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி, ஏதாவது நகையை தனது உள்ளங்கையில் வைக்குமாறு தெரிவித்தார். இதனை நம்பிய தம்பதி, தங்க கம்மலை வைத்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள கோயிலில் தங்க கம்மலை வைத்து பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி, பன்னீர்செல்வத்தை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற மாந்தீரிகவாதி, அவரை கோயிலில் அனுப்பிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதுதொடர்பான புகாரின் பேரில், அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்குரிய 2 பேர் இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட நபர்கள், திருப்பூரை சேர்ந்த செல்வம் மற்றும் அவரது மகன் சிவகாசி என தெரியவந்தது. விருதாச்சலத்தில் பதுங்கி இருந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.