`Footage'-ஆல் சிக்கல்...மஞ்சு வாரியர் மீது பிரபல நடிகை பகீர் புகார்... பற்றியெரியும் மலையாள சினிமா

x

மஞ்சு வாரியரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மலையாள நடிகை ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

மலையாள திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர், தமிழில் அசுரன், துணிவு படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்...

வேட்டையன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர்...

மலையாள திரையுலகில் நடிகையாக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் உள்ள மஞ்சு வாரியர் தனது மூவி பக்கெட் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஃபுட்டேஜ் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்...

க்ரைம் திரில்லரான இப்படத்தில், மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்திலும், சீதள் தம்பி என்ற நடிகையும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கான சண்டைக் காட்சி ஒன்று காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. மிகவும் ரிஸ்க் நிறைந்த ஆக்சன் காட்சி என்ற சூழலிலும், சீதள் தம்பி அக்காட்சியில் நடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு, எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல மாத சிகிச்சைக்கு பின் சீதள் தம்பி வீடு திரும்பிய சூழலில், ஃபுட்டேஜ் படம் வெளியானது..

இந்நிலையில் தான் படத்தின் தயாரிப்பாளரான மஞ்சு வாரியருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார் சீதள் தம்பி.

படப்பிடிப்பின் போது, ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்த ஒரு உதவியும் செய்யப்படவில்லை என்றும், சொந்த செலவிலேயே தனக்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாததே சீதள் தம்பியின் நிலை மோசமாக காரணம் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை சீதள் தம்பிக்கு 1.80 லட்சம் வரை மட்டுமே தயாரிப்பு நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், காலில் ஏற்பட்ட காயத்தால் வாழ்நாள் முழுவதும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவரது எதிர்கால திரையுலக வாழ்வே கேள்விக்குறியாகி விட்டதாக குறிப்பிட்டு 5.75 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளார் சீதள் தம்பி.

30 நாட்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்படாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், முன்னணி நடிகை மஞ்சு வாரியர் மீதான இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்