"நான் உழைச்சாதான் எங்க வீட்ல சாப்பாடு" "பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகிறார்கள்" கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்
நெல்லை மாவட்டம் திசையன்விளையில், வங்கியில் மகளிர் குழு கடன் பெற்று தருவதாகக் கூறி, 90க்கும் மேற்பட்டோரிடம் நான்கரை லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
திசையன்விளையை சேர்ந்தவர் வள்ளிநாயகம். இவரது மனைவி ஈஸ்வரி, மகளிர் குழுவில் தலைவியாக உள்ளார். இந்த தம்பதி இருவரும் சேர்ந்து, குழு உறுப்பினர்களின் பெயர்களை கையெழுத்திட்டு பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வள்ளிநாயகம், வங்கியில் மானியம் முறையில் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, விஜி என்ற திருநங்கை உட்பட 90 பேரிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் என நான்கரை லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். அதன் பின், வங்கியில் கடன் கிடைத்து விட்டதாகக் கூறி, இரண்டு தவணைகளாக 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை விஜியிடம் கொடுத்துள்ளார். அதனை வங்கிக்கு கொண்டு சென்றபோது, வள்ளிநாயகம் வங்கி கணக்கு ரத்து செய்யப்பட்ட காசோலையை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக திருநங்கை உட்பட பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திருப்பி கேட்டபோது, அவர்களை வள்ளிநாயகம் மிரட்டியுள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்டவர்கள் வள்ளி நாயகத்திடம் பேசிய செல்போன் உரையாடல் வெளியாகியுள்ளது.