"தமிழகம் முழுவதும் நடக்கும் மோசடி?" - மதுரை ஐகோர்ட் நீதிபதியே கூறிய அதிர்ச்சி தகவல்
தமிழகம் முழுவதும் நடக்கும் மோசடி?" - மதுரை ஐகோர்ட் நீதிபதியே கூறிய அதிர்ச்சி தகவல்
தமிழகம் முழுவதும் கஞ்சா வழக்குகளில், 80 விழுக்காடு ஜாமின் மனுக்கள் குறிப்பிட்ட ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்வது தெரிய வந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
கஞ்சா வழக்கில் 15 மாதங்களாக சிறையில் உள்ள டோனி என்பவர் தாக்கல் செய்த ஜாமின் மனு நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் போதை பொருள் வழக்குகளில் கைது செய்யப்படும் நபரின் வழக்கறிஞராக, போலீஸாரின் தூண்டுதல் பேரில் குறிப்பிட்ட வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார் என்று நீதிபதி தெரிவித்தார்.
வேறு வழக்கறிஞர் குறுக்கிட்டால், வழக்கு தகவல் பெற அலையவிட்டு தாமதமாக வழங்குவதாகும், ஜாமின் வழங்க கடுமையாக ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதுபோன்ற மோசடி நடைபெறாமல் தடுக்க, வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் டிஜிபி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஒரு காவலர் பல ஆண்டுகளாக நீதிமன்ற பணி மேற்கொள்ளும் போது, அவர் ஒரு குழுவை உருவாக்கி செயல்படுவதற்கு வாய்ப்புள்ளதால், இதை தவிர்க்க நீதிமன்ற காவலர்களை அவ்வப்போது மாற்றுவதற்கான வாய்ப்புகளை டிஜிபி கண்டறிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த வழக்கில், மனுதாரர் சிறையிலிருந்து காலத்தை கருத்தில் கொண்டு, நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.