"அதை செய்யாவிட்டால்..." நீதிபதி கொடுத்த எச்சரிக்கை

x

நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் மதிப்பதோ, அதனை நிறைவேற்றுவதோ கிடையாது என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி 2019-ம் ஆண்டு நடத்திய குரூப் 1 தேர்வில், தமிழ் வழியில் பயின்றதாக போலி சான்றிதழ் வழங்கி, 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றவர்கள் மீது நடவடிக்கை கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலி சான்றிதழ் வழங்கிய 4 பேர், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் திருப்தி இல்லை என தெரிவித்த நீதிபதிகள், 2010-ம் ஆண்டு முதல், தற்போது வரை தமிழ் வழி இடஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்களின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை என்றும், அவற்றை மதிப்பதும் இல்லை என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு இறுதியாக 15 நாள் கால அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், உத்தரவுகளை நிறைவேற்றாவிட்டால், நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் கடுமையான உத்தரவுகளை பிறப்பிப்பதுடன், வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்றும் எச்சரித்தனர். பின்னர், வழக்கு விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்