அறநிலையத்துறை அதிகாரி மீதான பாலியல் புகாரில் திடுக்கிடும் திருப்பம்
மதுரையில், இந்து அறநிலையத் துறையின் துணை ஆணையர் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.மதுரை மண்டல இந்து அறநிலையத்துறையின் துணை ஆணையராக இருப்பவர் செல்லத்துரை. இவர், அறநிலையத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களிடம், பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக கூறி, சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பெயரில் புகாரளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே, தமக்கு கீழ் பணியாற்றும் பெண்களின் பெயரில் போலி கையெழுத்துகள் இட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலின் முன்னாள் செயல் அலுவர் ஜவஹர் பொய் புகார் அளித்திருப்பதாக செல்லத்துரை போலீசில் புகாரளித்தார். கடந்த 31 ஆம் தேதி ஓய்வு பெற இருந்த ஜவஹர், தொடர் குற்றச்சாட்டுகளால் ஒழுங்கு நடவடிக்கை பெயரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதனால் ஆத்திரத்தில் இருந்த ஜவஹர், தன் மீது இவ்வாறு அவதூறு பரப்பி புகாரளித்திருப்பதாக செல்லத்துரை குறிப்பிட்டிருந்தார். விசாரணையில், செல்லத்துரையின் குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில், ஜவஹர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.