"பணம் வேண்டாம்.. வீட்டை எழுதி கொடு"துப்பாக்கி முனையில் மிரட்டிய நபர்.. வெளியான பகீர் வீடியோ... மதுரையில் பரபரப்பு
10 லட்சம் ரூபாய் கடனுக்கு, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கேட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டுவதாக... மதுரை மாநகராட்சி துணை மேயர் மீது மூதாட்டி ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் வசந்தா. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரிடம் தனது வீட்டை அடமானமாக வைத்து 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, சில நாள்களுக்கு முன் 15 லட்ச ரூபாய் தருவதாகவும், வீட்டை தன் பெயரில் எழுதி கொடுக்குமாறும் சொல்லி, தன்னை குமார் தாக்கியதாக வசந்தா போலீசில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, குமார் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் உட்பட மூவர்... மூதாட்டியிடம் வந்து குமாருக்கு ஆதரவாக தனது வீட்டை கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும், மேற்கொண்டு வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது எனவும் சொல்லி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரவி வரும் நிலையில், சம்பவம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மகனுடன் சேர்ந்து மூதாட்டி புகார் அளித்திருக்கிறார்.