சமாதான பேச்சில் ஈடுபட்ட வட்டாட்சியர் - ஏற்காத மக்கள்..கோயிலுக்கு சீல் வைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே இரு சமூகத்தினரிடையே பிரச்சனை எழுந்ததால், காளியம்மன் கோவிலுக்கு வட்டாட்சியர் சீல் வைத்துள்ளார். வீரடிப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில், திருவிழா நடத்திட முடிவு செய்து முன்னேற்பாடு செய்து வந்த நிலையில் பட்டியல் சமூக மக்கள் தங்களுக்கு தனி மண்டகப்படி வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோயில் பிரச்சனை தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டாட்சியர் காமராஜ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரச்சனைக்குரிய இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்ட நிலையில் சமாதானம் ஏற்படாததால், வட்டாட்சியர் கோயிலுக்கு சீல் வைப்பதாக கூறி கோயிலை பூட்டி சீல் வைத்தார். அந்த கிராமத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.