திடீரென தீக்குளிக்க முயன்ற ஊராட்சி தலைவர் - தாசில்தார் ஆபீஸ் முன் பரபரப்பு
கும்பகோணம் அருகே, வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சர்ச்சைக்குரிய இடத்தை அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வட்டாட்சியர் அலுவலகம் முன் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவிடைமருதூரை அடுத்த விஸ்வநாதபுரத்தில், முத்துகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பை கிருஷ்ணமூர்த்தி என்பவர் விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை கோவிந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் குமார் விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் அந்த இடம், தங்கள் பூர்வீக சொத்து என்று கூறி, முத்துகிருஷ்ணனின் மகள் லலிதா, கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், தென்னந்தோப்பை அளவீடு செய்ய வந்த நில அளவையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்த குமார், திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, வட்டாட்சியர் அலுவலகம் முன் அவர் தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்ததால், விபரீதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.