என்னது 1 நாள் டீ செலவே ரூ.2.29 லட்சமா? - கோவையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்
கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு தீ விபத்து சம்பவத்தில் நாளொன்றுக்கு ஆயிரத்து 800 பேர் பணிபுரிந்ததாகவும், நபருக்கு 127 ரூபாய் 39 காசுகள் செலவானதாகவும், மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீப்பிடித்து சுமார் 50 ஏக்கர் பரப்பில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 13 தீயணைப்பு வாகனங்களும், ஒரு வாகனத்திற்கு சுமார் 14 வீரர்களும் பணிபுரிந்ததாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.தீயணைப்பு வாகனங்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 23-லிருந்து 42 தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன. தீ உச்சம் பெற்ற 12 நாட்களில், தீயணைப்பு வீரர்கள், போலீசார், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவக் குழுவினர் என சுமார் 500 முதல் 600 நபர்கள், 3 குழுக்களாக அமைத்து 24 மணி நேரம் தீயணைப்பு பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபட்டவர்களுக்கு நாளொன்றுக்கு குடிநீர், உணவு, தேநீர் செலவு 2 லட்சத்து 29 ஆயிரத்து 37 ரூபாயாகும். நாளொன்றுக்கு, மூன்று சுழற்சி முறையில் சுமார் ஆயிரத்து 800 நபர்கள் தீ தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில்,சராசரியாக ஒருவருக்கு குடிநீர், தேநீர், பிஸ்கட், உணவு, மோர் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பட்ட செலவு 127 ரூபாய் 39 காசுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.