நடு ரோட்டில் துரத்தி துரத்தி அடித்து கொண்ட அதிமுக - திமுகவினர்.. கோவையில் பரபரப்பு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே தகராறு ஏற்பட்டு, சாலையில் ஒருவரை ஒருவர் துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகர்மன்ற கூட்டத்தில், தெரு விளக்கு பிரச்சினை தொடர்பாக, திமுக- அதிமுக உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் தண்ணீர் டம்ளரை தூக்கி எறிந்ததாலும் தீர்மான நகலை கிழித்து எறிந்ததாலும் அசாதாரண சூழல் ஏற்பட்டு திமுக- அதிமுக தரப்புக்கு இடையே வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் அரங்கின் நடுவே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அவர்களை சஸ்பெண்ட் செய்து நகர்மன்ற தலைவர் உத்தரவிட்டார்.
இதனை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் அரங்கிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தபோது, மீண்டும் திமுக அதிமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் விரட்டிச் சென்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் போலீசார் தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் நிகழமால் பார்த்துக் கொண்டனர். கலைந்து சென்ற இரு தரப்பினரும் காவல் துறையில் மாறி மாறி புகார் அளித்துள்ளனர்.