வலி தெரியாமல் தூக்கத்திலேயே பிரிந்த டூரிஸ்ட் இளைஞர்கள் உயிர் கொடைக்கானலில் உயிர் குடித்த `ஆவி புகை’?

x

கொடைக்கானல் தங்கும் விடுதியில் பார்பிகியூ முறையில் சிக்கனை சமைத்து சாப்பிட்ட 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களது மரணத்துக்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

திருச்சியை சேர்ந்த ஜெயகண்ணன் தனது நண்பர்களான சென்னையை சேர்ந்த ஆனந்தபாபு உள்பட 4 பேருடன் கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார். முன்னதாக, அவர்கள் கொடைக்கானலுக்கு சென்றவுடன் என்னவெல்லாம் சமைத்து சாப்பிடலாம் என ஒரு திட்டத்தை போட்டுள்ளனர்.

அதில் ஒன்று பார்பிகியூ முறையில் சிக்கனை நெருப்பில் சுட்டு சமைத்து சாப்பிடுவதாகும்... அதற்கு தேவையான அடுப்பு, மரக்கரி, சிக்கன், மசாலா ஆகியவற்றை வாங்கிய அவர்கள் காரில் ஏற்றிக்கொண்டு கொடைக்கானலுக்கு புறப்பட்டனர்.

மாலை நேரத்தில் கொடைக்கானல் வந்தடைந்த அவர்கள் சின்னப்பள்ளம் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துள்ளனர். அதனை சுற்றி உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்த அவர்கள் உற்சாகமாக குழு புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

அதுதான் அவர்கள் எடுத்த கடைசி புகைப்படம் என தெரியாத நண்பர்கள் நேராக விடுதி அறைக்கு வந்து தங்களது சமையல் திட்டத்தை அரங்கேற்ற தொடங்கினர். அறையின் நடுவே பார்பிகியூ அடுப்பை வைத்த அவர்கள் மரக்கரியை பற்ற வைத்து சிக்கனை ஆசையுடன் சுட்டு எடுத்துள்ளனர்.

அதற்கு ஏற்றார்போல மதுபானங்களையும் வாங்கி வந்திருந்த நண்பர்கள் பார்பிகியூ சிக்கனுடன் சேர்த்து ஒரு பிடி பிடித்துள்ளனர். இதற்கிடையே கொடைக்கானலில் மழை பெய்ததால் அவர்களை குளிர் நடுங்க வைத்துள்ளது.

இதனால் அறையை பூட்டிய அவர்கள் பற்ற வைத்த அடுப்பு முன்பு அமர்ந்து குளிர்காய்ந்தபடி மது அருந்தி உள்ளனர். மதுபோதை தலைக்கேற ஜெயக்கண்ணனும், ஆனந்தபாபுவும் அதே அறையிலே தூங்கிவிட மற்ற இருவரும் வேறொரு அறைக்கு சென்று உறங்கி உள்ளனர்.

காலை விடிந்ததும் எழுந்து வந்து நண்பர்கள் அறையை திறந்தபோது ஜெயகண்ணனும், ஆனந்த பாபுவும் மூச்சு பேச்சில்லாமல் கிடந்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தநிலையில், அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர் இருவரையும் சோதனை செய்துள்ளார்.

இருவரும் பலியானதை அறிந்த அவர் அளித்த தகவலில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர் பொன்ரதி உடலை பரிசோதனை செய்ததுடன் அவர்களது நண்பர்களிடமும் விசாரணை நடத்தினார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் பலியாகி இருக்கலாம் என மருத்துவர் பொன்ரதி தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு மரத்தில் இருந்து தயாராகும் கரியில் இருந்தும் வெவ்வேறான விஷத்தன்மை வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

சிக்ரி, பார்பிகியூ அடுப்பை அறைக்குள் வைத்து பயன்படுத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், வெட்ட வெளியில் மட்டுமே அவற்றை பற்ற வைத்து பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்