கிளாம்பாக்கத்தில் பஸ் ஏறிய இளம் பெண்ணுக்கு - டிரைவர் கண்டக்டரால் காத்திருந்த அதிர்ச்சி
இருக்கையை மாற்றி தரக்கூறிய பெண் பயணியை நடத்துனர் ஒருமையில் திட்டியதாக புகார் எழுந்துள்ளது
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் செல்வதற்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் இளம் பெண் ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அதேபோல் அவரது பக்கத்து சீட்டில் வேறு ஒரு பெண் பயணி ஒருவர் முன் பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிளாம்பாக்கத்திலிருந்து,பேருந்து புறப்பட தயாராக இருந்த நிலையில் பெண் பயணியின் அருகில், ஆண் ஒருவர் வந்து அமர்ந்திருந்துள்ளார். பின்பு இது குறித்து பேருந்து நடத்துனரிடம் கேட்ட போது, அதற்கு அரசு பேருந்து ஓட்டுனர் ஒருமையிலும் தகாத வார்த்தைகளிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பெண் பயணியின் சகோதரருக்கும் பேருந்து நடத்துனருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக பெண் பயணியை ஏற்றிக் கொள்ளாமலேயே பேருந்து கிளம்பிச் சென்றுவிட்டது. இது குறித்து புகார் தெரிவித்துள்ள பெண்ணின் சகோதரர் போக்குவரத்து துறை, சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.