தென் தமிழகத்திற்கு திரும்பும் காவிரி.. `220 டன்..' முதல் கட்ட பணி நிறைவு
மாயனூர் காவிரி ஆற்றில் உள்ள கதவணையிலிருந்து வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் வகையில் புதிய கால்வாய் வெட்டும் பணி முதல் கட்டமாக நிறைவு பெற்றது.
கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கும் அளவிற்கு இருவழிச் சாலையுடன் கூடிய கதவனை கட்டப்பட்டு உள்ளது.வெள்ள காலங்களில் வீணாக கடலில் சென்று கலக்கும் தண்ணீரை காவிரியில் இருந்து திருப்பி, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு போன்ற தென் பகுதி நதிகளுடன் இணைக்க, புதிய கால்வாய் வெட்டும் பணி, 2021இல் தொடங்கியது. இதற்காக 4.1 கிலோமீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய கால்வாய் வெட்டும் பணி, ரூபாய் 171 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றது. தற்போது 220 டன் எடை கொண்ட ராட்சச இரும்பு ஷட்டர்கள் பொருத்தும் பணியுடன் நிறைவு பெற்றது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியில் இருந்து இந்த கால்வாய் பகுதிக்கு வரும் வழியில் குறுக்கிடும்,தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே இருப்புப் பாதை பகுதியில் கால்வாய் வெட்டும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.