அழுக்கு சட்டையோடு நிர்கதியாய் நின்ற சிறுவன்..கேள்விக்கு வந்த பதிலை கேட்டு திருதிருவென முழித்த மக்கள்
குமரி மாவட்டம் கடையால் அருகே மலையோர பகுதியான மருதம்பாறை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சற்று மனநிலை பாதித்த சிறுவன் ஒருவன் சுற்றி திரிந்துள்ளான்.
இதனை கவனித்த அப்பகுதி மக்கள், சிறுவனிடம் விசாரித்த போது, இந்தியில் ஏதோ கூறியுள்ளான்..தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை..
அழுக்கான உடைகளுடன் இருந்த சிறுவனை கண்டதும் ஒருவர் தாமாக முன்வந்து அவரை குளிக்க வைத்து உணவு வழங்கியுள்ளார்.
அத்துடன் இந்தி தெரிந்த பெண் ஒருவரிடம் சிறுவனை அழைத்து சென்று விசாரித்த போது, அவர் ராஜஸ்தானை சேர்ந்த சுபாஷ் குமார் என தெரியவந்துள்ளது.
16 வயதேயான சிறுவன் ஏதுமறியாமல் சுற்றித்திரிந்ததை கண்டு மனம் பதைபதைத்து போன அந்த பெண் தனது அம்மாவான சுகுமாரி என்பவரின் அனுமதியுடன் தனது வீட்டிற்கு சிறுவனை அழைத்து சென்றார்...
அங்கேயே இரு நாட்களாக சிறுவனுக்கு உணவு, இருப்பிடம் என அனைத்தையும் கவனித்து வந்துள்ளனர்...
மூதாட்டியான சுகுமாரியின் அரவணைப்பில் பத்திரமாய் இருந்துள்ளான் சிறுவன்..
மற்றொரு புறம் சிறுவன் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்ந்துள்ளனர். இந்த செய்தி, கடைசியில் சிறுவனின் உறவினர்களை சென்றடைந்தது...
கருங்கல் பகுதியில் உள்ள தனியார் இஞ்ஜினியரிங் கல்லூரியில் வேலை செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிறுவனின் மாமா மகேஷ், சிறுவனை தேடி மருதம்பாறை சென்றடைந்தார்.
கடந்த 5 நாட்களுக்கு முன் தங்குமிடத்தில் இருந்து காணாமல் போன சிறுவன் சுபாஷ் குமாரை எங்கெங்கோ தேடி வந்த அவர், மருதம்பாறை வந்து சிறுவனை கண்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
தனது மாமாவை கண்டதும் ஆனந்த கண்ணீர் வடித்தான் சிறுவன் சுபாஷ் குமார். பின்னர் ஆதார் அட்டை மற்றும் ஆவணங்களை காண்பித்த பின் சிறுவனை அழைத்து செல்ல மகேஷ் முற்பட, அங்கு ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது..
சிறுவனை இரண்டு நாட்களாக பார்த்து பராமரித்து வந்த மூதாட்டி சுகுமாரி , சிறுவனை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தியதோடு, கடைசியாக சிறுவனுக்கு உணவளித்து விட்டு வழியனுப்பட்டுமா ? என அன்புக் கோரிக்கை வைத்தார்..
அதற்கு சிறுவனின் உறவினர்கள் தலையசைக்க, வீட்டிற்குள் அழைத்து சென்று சிறுவனுக்கு உணவளித்து பின்பு உறவினர்களுடன் வழியனுப்பி வைத்தனர்..
அன்பு அனைத்தையும் மாற்றும் என்பார்கள்.. யாரென்றே தெரியாத ஒரு சிறுவனிடம் இந்த மூதாட்டி காட்டிய அன்பு அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது..