கள்ளச்சாராயம் 100 லிட்டர், 50 லிட்டர்... என்ன தண்டனை தெரியுமா?
கள்ளச்சாராயம் 100 லிட்டர், 50 லிட்டர்... என்ன தண்டனை தெரியுமா? - சாராய வியாபாரிகளை நடுங்க விடும் மது விலக்கு சட்டம்
கள்ளச்சாராய மரணம் தொடர்பான குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.100 லிட்டருக்குமேல் கள்ளச்சாராயம் உள்ளிட்ட மது வகைகள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தால் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் 7 ஆண்டுகள் வரை தண்டனையும், ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.50 லிட்டருக்கு மேலான அளவு கள்ளச்சாராயத்திற்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனையும், ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும்.50 லிட்டருக்கு கீழ் உள்ள அளவுகளுக்கு ஓராண்டு வரை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கஞ்சா பயிரிடுதல், போதை மருந்து தயாரிக்கக் கூடிய ஆலைகள் தொடர்பான குற்றங்களுக்கு, ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை, 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.கள்ளச்சாராய மரணம் தொடர்பான குற்றவாளிகளுக்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல், 10 லட்சத்திற்கும் குறையாத அபராதத் தொகை விதிக்கப்படும்.கள்ளச்சாராயத்தில் மெத்தனால் போன்ற பொருட்களை கலந்து விற்றால் 7 ஆண்டு வரை தண்டனையும், 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் இடங்கள், வீடு, கொட்டகை உட்பட அனைத்து பகுதிகளுக்கும் சீல் வைக்கப்படும்.கள்ளச்சாராயம் குறித்து விளம்பரம் வெளியிட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனையும், ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.கள்ளச்சாராயம் தயாரிக்கப்படும் உபகரணங்கள், போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்கள் என அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.கள்ளச்சாராயம் தொடர்பான வழக்குகளில் தண்டனை அடுத்தடுத்து பெற்றால் அவரை வேறு மாவட்டத்திற்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.