தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்.. குடித்தது சாராயம் இல்லையா?.. அலெர்ட் கால் வந்தும் சேல்ஸில் பிஸி..
பெயரில் மட்டுமே கருணையை கொண்டிருக்கும் கருணாபுரத்தில் நடந்த சம்பவத்தினால்... இன்னுமும் ஓயாத மரண ஒலங்கள்.. மனதை ரணமாக்குகின்றன..
கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாரயத்தை குடித்த ஐம்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இன்னுமும் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில், விஷச் சாரயத்தை விற்பனை செய்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், சின்னத்துரை, மாதேஷ், ஜோசப், ராமர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர்கள் தெரிவித்த தகவல்களை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்
உயிர்களை பலி வாங்கிய மெத்தனால் மற்றும் டர்பன்டைன்ஆயிலை சென்னை மாதவரத்தில் உள்ள டர்பன்டைன் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கி.... அதனை யாரும் சந்தேகப்படாத வகையில் விருத்தாச்சலத்தில் உள்ள பீங்கான் தொழிற்சாலைக்கு கொண்டு சென்று இருக்கிறார் மாதேஷ்...
இங்கு தான் மாதேஷ் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்து இருக்கிறார்....தொழிற்சாலைக்கு தேவையான அளவை விட அதிகமான அளவு மெத்தனால் மற்றும் டர்பன்டைன் ஆயில் லோடுகளை போலியான பில்கள் மூலம் எடுத்து வந்து....மீதமுள்ள மெத்தனால் மற்றும் டர்பன்டைன்ஆயிலை போதைக்காக பயன்படுத்தி இருக்கிறார்
இதன் பின்னர் மெத்தனால் ஜோசப் மூலமாக சின்னத்துரைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் அவரிடமிருந்து கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், ராமர் என வியாபாரிகளின் பட்டியல் நீண்டு இருக்கிறது.
இதன் பின்னர்தான் ராவான மெத்தனாலில் தண்ணீரை கலந்து விற்பனை செய்துள்ளனர். இதில் ராமர் என்பவர் வீட்டிலிருந்த மெத்தனால் கலந்த சாரயத்தை அவரது தந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்ததால், ராமருக்கு பொறி தட்டியிருக்கிறது....கொண்டுவந்த சரக்கில் ..விஷம் கலந்திருப்பதாக உணர ..... உடனடியாக கன்னுக்குட்டி உள்ளிட்ட வியாபாரிகளை அலெர்ட் செய்து இருக்கிறார் ராமர்...
ஆனால் 300 லிட்டர் மெத்தனால் கலந்த விஷத்தை விற்பனை செய்வதில் பிஸியாக இருந்த கன்னுக்குட்டி இதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இவர் செய்த விற்பனை மூலமாகவே அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இதனிடையே ராமர் தன்னிடமிருந்த 30 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயத்தை தரையில் கொட்டி அழித்து இருக்கிறார். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதை கண்ட சின்னத்துரையும் தன்னிடம் இருந்த மெத்தனால் பேரல்களை ஆற்றில் ஊற்றி அழித்து இருக்கிறார்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரில் சிலர்...தமிழக அரசியலில்.. எதிர்க்கட்சி வரிசையில் உள்ள.. ஒரு கட்சியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சாராய வியாபாரிகள் அந்த கட்சி தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் சோதனையின் போது கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே ஏற்கனவே கைப்பற்றப்பட்ட மெத்தானாலை போலீசார் ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவில் தான் எவ்வளவு சதவீதம் மெத்தனால் தண்ணீரில் கலக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவரும்.