தமிழகமே பார்த்திடாத கருணாபுரம் சுடுகாட்டின் கதறவிடும் கோர முகம்...மயான ஊழியர்களே காணாத பயங்கரம்

x

தமிழகமே பார்த்திடாத கருணாபுரம்

சுடுகாட்டின் கதறவிடும் கோர முகம்

மயான ஊழியர்களே காணாத பயங்கரம்

"என் வாழ்நாளில் இதுதான் முதல்முறை

எங்கு பார்த்தாலும் மனித எலும்புகள்"

விஷச்சாராயத்தால் உயிர்கள் பறிபோக சடலங்களை கண்ணீரோடு தகனம் செய்து வருகின்றனர் கள்ளக்குறிச்சி கருணாபுரம் மயான ஊழியர்கள்... கனத்த இதயத்துடன் காணப்படும் மயான ஊழியர்களின் மனநிலை என்ன?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

கள்ளக்குறிச்சி - கருணாபுரம்...வீதிக்கு 4 சடலங்கள்...விஷச்சாராயம் குடித்து விட்டது 50க்கும் மேற்பட்டோரின் உயிர்களை...

போதும் இனி வேண்டாம் என்று பிணங்களைத் தின்று செரித்து விட்டுக் கதறுகிறது ஓய்வேயில்லா இந்த மயானம்...

கண்கள் முழுக்கக் கண்ணீருடன்...மனம் முழுக்க கவலையுடன்...கைகள் நடுங்க...விறகுக் கட்டைகளை அடுக்கி...கொத்துக் கொத்தாக விஷச்சாராயத்தால் பலியானவர்களின் சடலங்களை தகனம் செய்து வருகின்றனர் இந்த மயான ஊழியர்கள்...

ஊர் உலகத்தையே அடங்கச் செய்த கொரோனா சமயத்தில் கூட இத்தனை பிணங்களை இந்த மயானம் பார்த்ததில்லையாம்...

ஊரில் யாரோ ஒருவரின் உடலை எரிப்பதோ புதைப்பதோ பெரிய உணர்வு ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி விடாது... ஆனால் இங்கு இறந்தவர்கள் அனைவரும் இவர்களின் சொந்தபந்தங்கள்... தாங்கள் இதுவரை பேசி சிரித்து உறவாடி மகிழ்ந்த உறவுக்காரர்கள் உடல்களை சாம்பலாக்க எத்துனை மன உறுதி வேண்டும் இவர்களுக்கு...

அதிலும் முதலில் நடந்த இறுதி ஊர்வலத்தில் மழை கொட்டித் தீர்த்தது...சராசரியாக ஒரு சடலம் எரிய 8 மணி நேரம் பிடிக்கும்...ஆனால் மழையால் விடிய விடிய இந்த மயான ஊழியர்கள் வீட்டுக்கே போகவில்லை...

இந்த விஷச்சாராயம் பாரபட்சம் பார்க்காமல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை காவு வாங்கி விட்டது... பிள்ளைகளுக்குக் கொள்ளி வைக்க எந்தப் பெற்றோருக்குத் தான் துணிவுண்டு?...பச்சைக் குழந்தைகள் கையில் கொள்ளியை நினைத்துப் பார்க்கையிலேயே மனம் பதறுகிறது...

இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு தமிழகத்தில் எங்குமே நடந்து விடக்கூடாது என்று கண்ணீர் விட்டுக் கொண்டே தான் சடலங்களை எரியூட்டினோம் என்று கலக்கத்துடன் தெரிவித்தனர் மயான ஊழியர்கள்...

தன் 60ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில் இப்படி ஒரு சம்பவத்தைத் தான் பார்ப்பது இதுவே முதன்முறை...அதுவும் மிகக்கொடுமை என வேதனை தெரிவிக்கிறார் இந்த மூத்த மயான ஊழியர்...

அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என்று உறவுமுறை கூறி அழைத்து வந்த சொந்தங்களின் உடல்களை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து தகனமும் அடக்கமும் செய்த பாரத்தில் இருந்து இன்னமும் இந்த மயான ஊழியர்களால் வெளிவர முடியவில்லை என்பது தான் உண்மை...


Next Story

மேலும் செய்திகள்