கிளி ஜோசியத்தில் கிளிக்கு`நோ’கிளி அவதாரம் எடுக்கும் காக்டெய்ல்..சரியாக சீட்டை எடுக்கிறதா காக்டெய்ல்?

x

கிளிகளை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்க்க தடை உள்ளதால், செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் காக்டெய்ல் பறவையை வைத்து ஜோசியம் பார்க்கும் நிலைக்கு ஜோசியர்கள் வந்திருக்கிறார்கள்...

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் ஒரே சீட்டில் துல்லியமாக சொல்லிவிடும் என் கிளி... என கூடியிருப்பவர்களை தனது வார்த்தையால் வசியப்படுத்தி விடுவது கிளி ஜோசியக்காரர்களுக்கு கைதேர்ந்த கலை...

ஐயாவுக்கு ஒரு நல்ல சீட்டா எடுத்து போடும்மா என ஜோசியர் போட்ட அன்புக்கட்டளைக்கு இணங்கி..அடுக்கியுள்ள சீட்டுகளில் ஒன்றை, தனது அலகின் மூலம் கவ்வி ஜோசியருக்கு கொடுத்து விட்டு சமத்தாய் கூண்டுக்குள்ளேயே சென்று விடும் கிளிகள்..

இவைகளை வைத்தே பிழைப்பு நடத்தி வந்தனர் கிளி ஜோசியக்காரர்கள்...

ஜோசியத்தின் மீதான நம்பிக்கையையும் தாண்டி கிளியின் மீதான ஆர்வமே, இத்தொழிலை பட்டித்தொட்டி எங்கும் பரவச் செய்தது..

இப்படி, பார்க், பீச், திருவிழா என பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் எல்லாம்..கூண்டில் கிளியோடு உலா வந்து கொண்டிருந்த ஜோசியக்காரர்களின் தற்போதைய நிலையோ.. பரிதாபமாகவே உள்ளது..

காரணம், பச்சைக்கிளியை கூண்டில் அடைத்து அதனை வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றமாகும். அதனையும் மீறி இவ்வகையாக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கிளிகள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.

இதனால், கிளி ஜோசியக்காரர்கள் வாழ்வாதாரம் பாதித்ததோடு பலர் தொழிலையே கைவிட்டனர்...

அதன் விளைவாக, காக்டெய்ல் வகை பறவைகளை வைத்து ஜோசியம் பார்க்க தொடங்கி விட்டனர் ஜோசியக்காரர்கள்..

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கோவில் திருவிழா ஒன்றில், காக்டெய்ல் வகை கிளிகளை வைத்து ஜோசியம் பார்த்ததை காண முடிந்தது..

இதுகுறித்து ஜோசியம் பார்ப்பவர்களிடம் கேட்ட போது, தனது வேதனைகளை கொட்டித்தீர்த்தனர் கிளி ஜோசியர்கள்..

பரம்பரை பரம்பரையாக பார்த்து வந்த தொழிலை விட முடியாமல் குடும்ப கஷ்டத்திற்காக காக்டெய்ல் வகை பறவையை வைத்து ஜோசியம் பார்ப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்..

முன்பெல்லாம் கிளிகள் தங்கள் கைகளிலேயே சீட்டை எடுத்து வந்து கொடுக்கும் ஆனால் தற்போது காக்டெய்ல் பறவையின் செயல்பாடுகள் கிளியை போல் இல்லாததால் கிளி ஜோசியத்தில் சுவாரஸ்யம் குறைந்துள்ளது..

இதனால் அந்த கிளி இருந்த மாதிரி இது இல்லப்பா என சலிப்புடன் கூறுகின்றனர் கிளி ஜோசியர்கள்...

இந்த தலைமுறையுடன் கிளி ஜோசியம் அழிந்து விடும் எனக்கூறும் ஜோசியர்கள், தங்களின் பரிதாப நிலை மாறாதா ? என்ற ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்