கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த இளைஞர்! போராட்டத்தில் குதித்த உறவினர்கள்.. ஓசூரில் பரபரப்பு
ஓசூரில் தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில், சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
பேளகொண்டப்பள்ளி, சுந்தரம் ஆட்டோ கிளேட்டன் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிய இளைஞர் நவீன் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இளைஞர் உயிரிழந்த சில மணி நேரத்திற்கு பிறகே அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நவீன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது உயிரிழந்த நவீன் குடும்பத்திற்கு இழப்பீடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர். சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.