தீக்கு இரையான புது பைக்குகள் ...தொடரும்சம்பவம்
ஓசூர் அருகே உள்ள மதகொண்டப்பள்ளியில் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து இன்று ஒரு கண்டெய்னர் லாரியில் 40 எலக்ட்ரிக் பைக்குகளை ஏற்றி கொண்டு ஓட்டுநர் பெங்களூரில் உள்ள ஜெய்நகர் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார்.
அப்போது கண்டெய்னர் லாரி தளி சாலையில் மதகொண்டப்பள்ளி அடுத்துள்ள உளிவீரணப்பள்ளி என்ற இடத்தில் சென்றபோது சாலையின் தாழ்வாக சென்ற மின் ஒயரில் லாரியின் மேல்புறம் உரசி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் லாரியில் மேல் அடுக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 எலக்ட்ரிக் பைக்குகள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் 20 எலக்ட்ரிக் பைக்குகள் தீயில் எரிந்து சேதமானது. கண்டெய்னர் லாரியில் கீழ் அடுக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 எலக்ட்ரிக் பைக்குகள் தீ விபத்தில் சிக்காமல் தப்பின. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் ஆகும், இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.