அதிர்ச்சி கொடுத்த ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி - சாட்டையை சுழற்றிய கோர்ட்
புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற டிஎஸ்பிக்கு 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட குறைதீர் நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை டிஎஸ்பி பாலகுரு கடந்த 2021ம் ஆண்டு மே 18ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 15 நாட்கள் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சூழலில் அவருக்கு மொத்தமாக 4 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மருத்துவ கட்டணம் வந்துள்ளது...
இதனை அடுத்து அவர் அரசு சார்பில் காப்பீடு எடுத்துள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திடம் இன்சூரன்ஸ் பெறுவதற்கு முறையிட்டபோது அவர்கள் முழுத் தொகையும் தர முடியாது என மறுத்ததோடு 1 லட்சத்து 32 ஆயிரத்து 371 ரூபாய் மட்டுமே சிகிச்சைக்காக வழங்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலகுரு புதுக்கோட்டை மாவட்ட குறைதீர் நுகர்வோர் ஆணையத்திற்கு சென்றதன் விளைவாக அவருக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 621 ரூபாய் மருத்துவ கட்டணத்திற்கான மீதி பணத்தை 12 சதவீத வட்டியுடன் வழங்கவும், அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக இழப்பீடாக 2 லட்ச ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனம் 45 நாட்களுக்கும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது... மேலும் வழக்கு செலவிற்காக 10 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...